Saturday, June 11, 2005

'தகவல் அறியும் உரிமை மசோதா' மிகவும் சக்தி வாய்ந்தது.

'தகவல் அறியும் உரிமை மசோதா' மிகவும் சக்தி வாய்ந்தது. அது, சாதாரண மக்களுக்கு, ஜனநாயகத்தில் பங்கேற்பதற்கும், பங்களிப்பதற்கும் சிறந்த வாய்ப்பளிக்கிறது. அதன் வீச்சை சமீப காலம் வரை அறியாமல் தானிருந்தேன். ஆனால், சில வலைத்தளங்களை பார்வையிட்ட போது, அது புரிந்து விட்டது. பரிவர்தன் அதில் ஒன்று.

RTI என்று செல்லமாக அழைக்கப்படும் இந்த மசோதாவிற்கேவான அமைப்பு இது. இதன் சக்தியை மக்களுக்குப் புரிய வைப்பதற்கும், சாதாரண மக்கள் தங்கள் அன்றாட பிரச்சனைகளை RTI மூலம் எப்படி தீர்த்துக் கொள்ள முடியும் என்று அறிவுறுத்துவதற்காகவும் இவர்கள் பாடுபடுகிறார்கள்.

உதாரணமாக, உங்கள் தெருவில் தெருவிளக்கு எரியவில்லை என்று வைத்துக் கொள்வோம். ஒரு கம்ப்ளயின்ட் கொடுக்கலாம்.. 'தகவல் அறியும் உரிமை மசோதா' எப்படி இதற்கு உதவும் என்று நாம் நினைக்கலாம். ஆனால், சரியான கேள்வியைக் கேட்பதன் மூலம், சரியான தகவல்களைத் தரச் சொல்வதன் மூலம், இது போன்ற சிறு-சிறு பிரச்சனைகளைக் கூட RTI மூலம் தீர்த்துக் கொள்ள முடியும் என்கிறார்கள் இவர்கள். அது பற்றி மற்றொரு பதிவில்.

==

RTI யினால் எந்த மாதிரியான தகவல்கள் பெற முடியும் என்ற ஐயம் உங்களுக்கு இருந்தால், மேலும் படியுங்கள்.

ஒரு சட்டமன்றத் தொகுதி உறுப்பினருக்கு வருடம் ஒன்றுக்கு 2 கோடி ஒதுக்கப்படுகிறது. அவரின் தொகுதி மேம்பாட்டிற்கு. எல்லா எம்.எல்.ஏ.க்களும் இந்தப் பணத்தை முழுவதுமாகச் செலவழித்து விடுவதில்லை. பலர் உறுப்படியாகச் செலவழிப்பதில்லை.
பலர் செலவு ஆரம்பிப்பதே இல்லை.

உங்கள் தொகுதி எம்.எல்.ஏ. இதில் எந்தக் கட்சி என்று அறிந்து கொள்ள RTI உதவும். ஆமாம். இந்த 2 கோடியில், எவ்வளவு செலவு செய்யப்பட்டிருக்கிறது? எதற்கெல்லாம்? இன்னும் எவ்வளவு மிச்சமிருக்கிறது? போன்ற எல்லாத் தகவல்களையும், ஒரு RTI போட்டு கறந்து விடலாம். நம்பமுடிகிறது?

சரி. இதற்கு எவ்வளவு செலவாகும்?

தமிழகத்தில் ஒரு நயாப் பைசா செலவழியாது. இலவசம். தகவல் அறியும் 'உரிமை' அல்லவா இது? ஆனால், சில மாநிலங்களில் கட்டணம் உண்டு. (இந்தியாவிலேயே, தகவல் அரியும் உரிமை மசோதாவை இயற்றிய முதல் மாநிலம் என்பதும், எந்த அமைப்பின் தூண்டுதலும் இல்லாமல், தமிழக அரசே முன்வந்து இயற்றிய மசோதா இதுவென்பதும் உபரி தகவல்.)

====
இந்த விண்ணப்பத்தை யாரிடம் அளிப்பது?

நகர மேம்பாட்டுத் துறை அலுவலகம். (அதாவது, எம்.எல்.ஏ. நிதிக்கு - நிதி ஒதுக்க எந்த அமைச்சகம் பொறுப்போ, அந்த அமைச்சகத்தின் அலுவலகம்.)

தகவல் எவ்வளவு நாளில் கிடைக்கும்?

ஒரு மாதத்திற்குள் தந்தாக வேண்டும். இல்லையென்றால் மேலதிகாரியிடம் செல்லலாம். (சில மாநிலங்களில், ஒரு மாதத்தில் தகவல் வரவில்லையென்றால், சம்பந்தப்பட்ட அதிகாரியின் சம்பளத்திலிருந்து பிடித்தம் இருக்கிறது. தமிழகத்தில், இதற்கு வழி இல்லை.)

1. இதற்குண்டான விண்ணப்பம், இங்கு இருக்கிறது. தமிழில். (பக்கத்தின் இறுதியில் பார்க்கவும்.)

2. எம்.எல்.ஏ. நிதி சம்பந்தமான கேள்வி இங்கு இருக்கிறது. (அதை முடிந்தவரை தமிழ்ப்படுத்தி கீழே கொடுத்திருக்கிறேன். மொழி பெயற்ப்பு சரி இல்லையென்றால், உங்கள் கருத்துக்களைத் தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.)

மேற்சொன்ன இரண்டையும் சேர்த்து விண்ணப்பிக்க வேண்டுமென்று நினைக்கிறேன்.

___________________________________________________________________________________
அன்புடையீர்,

சட்டமன்றத் தொகுதி உறுப்பினர், தொகுதி மேம்பாட்டுத் நிதியிலிருந்து, நிதி வருடம் 2004 ல் தொகுதி எண் _______ ற்கு ஆற்றப்பட்ட பணிகளின் கீழ்க்கண்ட விவரங்களைத் தருமாறு கேட்டுக்கொள்கிறேன்:

பணியின் பெயர்
பணி குறித்து சிறிது விவரம்
ஒதுக்கப்பட்ட தொகை
தொகை ஒதுக்கப்பட்ட தேதி
பணியின் இன்றைய நிலவரம்
பணிக்கு அமர்த்தப்பட்ட ஏஜென்சி
வேலை ஆரம்ப தேதி
வேலை முடிவு தேதி
வேலை வழங்கப்பட்ட தவணைகள்
அளிக்கப்பட்ட தொகை

இந்த நிதியாண்டின் தொடக்கத்தில் இந்த சட்டமன்ற உறுப்பினரின் நிதியில் எவ்வளவு தொகை இருந்தது?

இந்த நிதிக்கு நடப்பு நிதியாண்டில் உறுப்பினருக்கு எவ்வளவு தொகை வழங்கப்பட்டது?

மேற்ச்சொன்ன மொத்த தொகையிலிருந்து, மேம்பாட்டுப் பணிகளுக்கு எவ்வளவு பணம் இதுவரை ஒதுக்கப்பட்டிருக்கிறது?

நிதி ஒதுக்கலுக்கு காத்திருக்கும் பணிகளின் மொத்த நிதித் தேவை?

___________________________________________________________________________________

இந்தத் தகவல் எதற்கு பயன்படும்?

சட்டமன்றத் தேர்தல் வருகிறது. உங்கள் தொகுதி எம்.எல்.ஏ. யின் பணிகளை சீர் தூக்கிப் பார்க்க இது உதவும்.
உங்கள் பகுதியில், ஏதாவது வேலை நடைபெற வேண்டுமென்றால், உங்கள் எம்.எல்.ஏ. சாக்குப்-போக்கு சொல்லாமல் கிடுக்கிப்பிடி போட இது உதவும்.

இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, தகவல் பெற்று, அதை உங்கள் பகுதி மக்களிடம் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

11 Comments:

Anonymous கரிகாலன். said...

//தகவல் அரியும் உரிமை//

அண்ணா கொஞ்சம் தமிழையும் ஆறி(ரி)யுங்கள்.உங்களுக்கு புண்ணியமாகப்
போகும்.

11:05 AM  
Blogger புலம்பல்ஸ் said...

கரிகாலன், இப்பொழுது தான் பிழை திருத்தம் செய்து கொண்டிருந்தேன். திருத்தி விட்டேன். நன்றி.

11:13 AM  
Blogger சுந்தரவடிவேல் said...

விபரங்களுக்கு நன்றி.

1:15 PM  
Anonymous கரிகாலன். said...

நன்றிகள்.தகவலுக்கும் பிழைதிருத்தியதற்கும்.

1:51 PM  
Blogger செல்வராஜ் (R.Selvaraj) said...

பயனுள்ள பதிவு.

5:45 PM  
Anonymous Anonymous said...

அதெல்லாம் சரி. தகவல் கிடைக்குமா?

6:45 PM  
Blogger ராஜா said...

பயனுள்ள பதிவு.
= = =

/அதெல்லாம் சரி. தகவல் கிடைக்குமா?/

Anonymous, உதை வேண்டுமானால் கிடைக்கும். வேறு எந்த தகவலையும் இன்றைய நமது 'ஜனநாயக' சூழலில் எதிர்பார்க்க முடியாது.

= = =

எம்.எல்.ஏ.வை கணக்கு கேட்பது ஒருபுறம் இருக்க, அரசு அலுவலகங்களில் தனி நபர்களாகிய நாம் கொடுக்கும் மனுக்கள், விண்ணப்பங்கள், புகார்களுக்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என்பதை அறிந்துகொள்ள இந்த சட்டம் வகை செய்கிறது. அது நடைமுறைக்கு வந்தாலே பெரும்பாலோனோர் பயனடைவர். இப்படியொரு சட்டம் இருப்பதே பலருக்குத் தெரியாது. முதலில் இதுபற்றி விழிப்புணர்வு ஏற்பட வேண்டும்.

எனக்கென்னவோ தனிநபர்களாக இதில் எதையும் சாதித்துவிட முடியும் என்று தோன்றவில்லை. நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்க இருக்கும் தன்னார்வ அமைப்புகளைப்போல் இதற்கும் அமைப்புகள் ஏற்பட வேண்டும்.

11:14 AM  
Blogger புலம்பல்ஸ் said...

ராஜா, சுந்தரவடிவேல், செல்வராஜ், கரிகாலன், அனானிமஸ்,

உங்கள் பின்னூட்டங்களுக்கு நன்றி.

ராஜா-

நீங்கள் சொல்வது சரி. 'தகவல் அறியும் உரிமை மசோதா'வின் பயன் பல விதங்களில் இருக்கிறது. விழிப்புணர்வு தான் ஏற்பட வேண்டும். ஆனால், நீங்கள் நினைப்பது போல், தனிமனிதர்களால் சாதிக்க முடியாது என்று நான் நினைக்கவில்லை. முடியும். முயன்றாவது பார்க்க வேண்டும். முயன்று பார்ப்பதில் ஒன்றும் தடை இல்லை. செலவும் இல்லை. தமிழகத்தில் இருக்கும் வலைப்பதிவு நண்பர்கள் யாராவது முயன்று பார்க்க முடியுமா?. (நான் தற்சமயம் இந்தியாவில் இல்லை.)

5:50 PM  
Blogger jaihind said...

நண்பர்களே.. நான் பல அரசு அலுவலகங்களிடம் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் பல தகவல்களை பெற்றுள்ளேன். பெரும்பாலும் சரியான தகவல் கிடைக்கிறது. இருப்பினும் ஏதேனும் ஆவண நகல் கேட்டால் காலதாமதம் ஆகிறது.

- ரா.மோகனரங்கம்

10:47 PM  
Blogger jaihind said...

This comment has been removed by the author.

10:49 PM  
Anonymous Anonymous said...

bharathi
is it possible to get the information about the details and formalities about the petition submitted by the petition and the due date

9:51 PM  

Post a Comment

<< Home