Thursday, August 05, 2004

வி.குமார் - by சத்ய கபாலி

(வி.குமார் மலரும் நினைவுகள் - thread-ல் சத்ய கபாலியின் பதிவு இங்கு தமிழ் எழுத்துறுவில். நன்றி : சத்ய கபாலி, TFM page)

குமாரின் பாடல்களை எனக்கு அறிமுகம் செய்தது கே.பி. யின் படங்கள்தான். நீர்க்குமிழி படம் வந்தபோது பள்ளிப் பருவம். "இது நல்ல படம். ஆஹா இது அருமையான பாடல்" என்பதெல்லாம் தெரியாத வயது. ஓரே பொழுது போக்கு சினிமா பார்ப்பதுதான். அப்பா படங்களுக்கு வர மாட்டார். ஆபூர்வமாக ஏபி.நாகராஜன் புராணப் படம், தேவரின் யானை படம், அவ்வையார் மாதிரி படம் இப்படித்தான் வருவார்.

அம்மா பக்கத்து வீட்டு ம்யூஸிக் டீச்சருடன் நல்ல படங்களுக்கு போவாங்க. கூட வாண்டுகளும் போவோம். தரை டிக்கட் 22 பைசா எடுத்துட்டு அங்கும் இங்கும் ஒடுவோம்; படம் பார்ப்போம்; நடுவில் முறுக்கு வாங்கித் தருவாங்க; ராத்திரி ஷோ முடிஞ்சதும், தூங்கி வழிய அம்மா விரட்டிக் கொண்டு வந்து சேருவோம்.மறு நாள் அம்மாவும் டீச்சரும் படத்தை பத்தி விமர்சிப்பாங்க. நல்ல படம், நல்ல பாடல்கள், நல்ல டைரக்சன் என்று ரசித்து பார்த்தது பின்னாட்களில்தான்.

நீர்க்குமிழி படம் பார்க்கப்போனபோது புதுசா ஒரு டைரக்டர் நல்லா எடுத்துருக்கார்னு அம்மாவும் ம்யூஸிக் டீச்சரும் பேசிக் கொண்டது இன்றும் ஞாபகம் இருக்கிறது. பாதி படம் நாகேஷ் சிரிப்பா இருந்தது, கடைசியில் நாகேஷை சாகடிச்சுட்டாங்க இதுதான் அன்று மனதில் இருந்த எண்ணங்கள். படம் பார்த்த மறுநாள் அம்மாவும் டீச்சரும் பேசிக் கொண்டது இதுதான் ”ஸ்ரீதருக்குப் பிறகு பாலசந்தர் நல்ல டைரக்சன் செய்திருக்கார். நிச்சயம் பெரிய ஆளா வருவார் பாருங்க. அந்த புது MD குமார் கூட நல்லா பாட்டு போட்டிருக்கர்” என்று பேசினாங்க.

அன்று நீர்க்குமிழி முதல் இன்று ஸஹானா வரை அம்மா KB fan. ஆம்மாவை தொடர்ந்து நானும் KBயின் விசிரியானேன். ஆடுத்தடுத்து வந்த KBயின் படங்கள், முக்தாவின் படங்கள் மூலம் குமாரின் பாடல்கள் நெஞ்சில் நிறைந்தன. பின்னர் V.குமார் அவர்கள் எங்கள் பள்ளிக்கு வந்து, அவரை நேரில் பார்த்தபோதுதான் எவ்வளவு நல்ல மனிதர் என்பதை புரிந்து கொள்ள முடிந்தது. அவர் மேல் மிகுந்த மதிப்பும், மரியாதையும் வந்தது. சினிமாத்தனங்கள் இல்லாத அந்த நல்ல மனிதர் இந்த சினிமா உலகில் இருந்து, இவ்வளவு படங்களுக்கு இசையமைத்து, நெஞ்சில் நிறைந்த இத்தனை பாடல்களை தந்து சென்றதே மாபெரும் சாதனைதான்.

அப்பா அடிக்கடி சொல்வார் : truth, simplicity, humility always exist together. எளிமை, அடக்கம், பணிவு இவை எல்லாமே சத்தியத்தின் உருவங்கள்தான். V.குமார் இந்த குணங்கள் எல்லாம் ஒட்டு மொத்தமாக உருவானவர். இந்த குணங்களுக்கெல்லாம் கொஞ்சம் கூட சம்பந்தமில்லாத இந்த திரை உலகில் அவர் அத்தனை வருடங்கள் survive பண்ணியதே சாதனை என்றுதான் சொல்ல வேண்டும். அதனால்தான் அவரது திரை உலக வாழ்க்கை பெரும் போராட்டமாகவே அமைந்தது. (மீனைத் தூக்கி தரையில் போட்டா மாதிரிதான் அவர் திரை உலகில் வாழ்ந்திருக்கணும்)

ஆரம்ப காலப் படங்களைப் பாருங்கள். நீர்க்குமிழி, நாணல், மேஜர் சந்த்ரகாந்த், ஒவ்வொரு படத்திலும் மணி மணியாக பாடல்கள் தந்திருக்கிறார். AVM தயாரிப்பில் மேஜர் சந்த்ரகாந்த் மாபெரும் வெற்றிப் படம்; அதைத் தொடர்ந்து குமார் நிறையப் படஙள் பண்ணியிருக்கணும். ஆனால் அது நடக்கவில்லை. MSV, KVM இந்த 2 ஜாம்பவான் கள் முழுத் திறமையில் போயிட்டிருந்தாங்க. லாயல் producers அவர்களை விட்டு வரலை. KB கூட பாமா விஜயம், அனுபவி ராஜா அனுபவி படங்களுக்கு MSV யிடம் போயிட்டு இரு கோடுகள், எதிர் நீச்சல் , வெள்ளி விழா இப்படி திரும்ப சில படங்களுக்கு குமாரிடம் வந்தார்.. முக்தா சிரீனிவாசன் குமாரின் திறமையை மதித்து நினைவில் நின்றவள், பொம்மலாட்டம், நிறைகுடம், ஆயிரம் பொய் போன்ற படங்களுக்கு குமாரை MD ஆக்கினார். நடுவில் புத்திசாலிகள் மாதிரி படங்கள். படம் டப்பாவாகும்போது பாடல்களும் காணாமல் போய் விடுகின்றன. ஸ்வர்ணா பாடகியாக அறிமுகமான படம் அது. முத்தம் முத்தம் செந்தேனல்லவா TMS-ஸ்வர்ணா டூயட் இன்றும் ரசிக்கக் கூடிய ஒன்று. படம் போச்சு! பாட்டும் கேட்க அரிதாகி விட்டது.

60களிலிருந்து கடைசி வரை அவரின் திரைப் பயணம் எதிர்நீச்சலாகவே ஆகிப் போனது. நம்ம ஊரில் ஒரு பேச்சு வழக்கு உண்டு. “ஆனா விலாசம் இருக்கணும்” ஆனா விலாசம் என்பது அதிர்ஷ்டம். ஆந்த ஆனா விலாசம் குமாருக்கு இல்லாமல் போனது போலிருக்கு.

40 வருடஙள் தாண்டியும் அவரின் பாடள்கள் நம் நெஞ்சங்களில் நீங்காது நிற்பதால்தான் இன்றும் அவரின் பாடல்களை அலசிக் கொண்டிருக்கிறோம். இந்த ரசிகர்கள்தான் அவரின் திரை உலகில் சம்பாதித்தது. ரசிகர்கள் உள்ளவரை நூறு ஆண்டுகள் கழிந்தும் குமாரின் பாடல்கள் பேசப் படும்!
Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

0 Comments:

Post a Comment

<< Home